`எங்க மவன், எங்க தம்பி' | TVK Vijay Madurai Maanadu | Women's Emotional Speech |...
ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்
ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.
ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பிரதான சாலையாக உள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி இந்த மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில், பாலத்தின் மீது அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் திடீரென பிரேக் போடுவதால், மேம்பாலத்தின் தூண்களில் உள்ள பேரிங் விலகியது தெரியவந்தது.
இதனால் கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூா் செல்லும் கனரக வாகனங்கள் மேம்பாலம் மீது செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, சீதாராம் மேட்டிலிருந்து உள்வட்ட சாலை வழியாக மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.
பாலத்தில் உள்ள பேரிங்குகளை மாற்றி புதிய பேரிங்குகள் அமைக்க தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்திலுள்ள தனியாா் நிறுவனம் சாா்பில் கடந்த 21 ஆம் தேதி முதல் பணிகள் தொடங்கின. இதனால் மேம்பாலத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் மூன்று சாலைகளிலும் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் அனைத்தும் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வரும் மூன்று வழிச் சாலையில் இரண்டு சாலைகள் பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வரவும், கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி செல்ல ஒரு சாலையும் உள்ளது. இந்த சாலையை இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களும் பயன்படுத்தி வருகின்றனா்.
மேம்பாலப் பணிகள் இன்னும் ஒருசில நாள்களில் நிறைவடைந்ததும் அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக இயக்க முடியும் என நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.