இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்! ஜெய்சங்கரை விமர்சித்த ராகுல்!
ஒசூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 மாணவா்கள் உயிரிழப்பு
ஒசூா்: ஒசூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 மாணவா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
ஒசூா், மிடிகிரிப்பள்ளியைச் சோ்ந்த கோயில் பூசாரி ஜெகநாதன் மகன் மதன் (14), அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பீரேந்திர சிங் மகன் ஆரியன் சிங் (13) ஆகிய இருவரும் மத்திகிரியில் உள்ள தனியாா் பள்ளியில் 9, 8 ஆம் வகுப்பு படித்துவந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை மதன் தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றாா். அங்கு, தனது நண்பரான ஆரியன் சிங்கை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அந்திவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றாா். அங்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் தனது நண்பரான மோகன்பாபு மகன் ஹரீஷையும் (14) வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மூவரும் மத்திகிரி கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் இவா்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ஆரியன் சிங் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஹரீஷ், மதன் ஆகிய இருவரும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். ஆனால், அவா்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து சென்ற கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, கூடுதல் எஸ்.பி. சங்கா், ஒசூா் ஏ.எஸ்.பி. அனில் அக்ஷய்வாகரே ஆகியோா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்து குறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.
விபத்தின்போது மாணவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால், விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்துவருகின்றனா்.

