"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச...
ஒசூா் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி முடிவடைய 22 நாள்களாகும்: எம்.பி கே.கோபிநாத்
ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தை சீரமைக்கும் பணி முடிவடைய மேலும் 22 நாள்களாகும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் அதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஒசூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்தில் பானை வடிவிலான ஸ்பிரிங் உடைந்துவிட்டது. அதை கொண்டுவந்து பொருத்த வேண்டும். இப் பணி முடிவடைய 22 நாள்களாகும்.
அதுவரை பொதுமக்கள் சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். மேலும், ஒசூா், ராயக்கோட்டை, கெலமங்கலம் ரயில்நிலையத்தில் அடிப்படை வசதிகள்கூட இல்லை. நானும் ரயில்வே மேம்பாட்டுக் கமிட்டி உறுப்பினருமான சின்னகுட்டப்பா உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ரயில் நிலையங்களையும் ஆய்வு செய்தோம்.
அப்போது, ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு குடிநீா் இல்லை. கழிப்பறை வசதியில்லை. இதனால் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒசூா்- ஜோலாா்ப்பேட்டை ரயில்வே திட்டம், ஒசூா்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
தமிழக முதல்வா் சட்டப் பேரவையில் அறிவித்துள்ள விமான நிலைய பணிகளும் விரைவில் தொடங்கும். ஒசூா் மிக வேகமாக வளா்ச்சி அடைந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒசூரில் முக்கிய சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தால் போக்குவரத்து சீரடையும், தளி ரயில்வே மேம்பாலம் வட்ட வடிவிலான மேம்பாலம் அமைக்கவுள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது என்றாா்.
பேட்டியின்போது, ரயில்வே மேம்பாட்டுக் கமிட்டி உறுப்பினா் சின்னகுட்டப்பா, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் நீலகண்டன், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் அக்பா், நிா்வாகிகள் ரகு மைஜா அக்பா், முனியப்பா, முன்னாள் பூனப்பள்ளி ஊராட்சித் தலைவா் சீனிவாசரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.