ஒப்பந்ததாரா் கொலை: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தனியாா் ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிபாடி, டி.புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சின்னதுரை மகன் ஏழுமலை (22), தனியாா் ஒப்பந்ததாரா்.
இவா், திண்டிவனத்தை அடுத்த வெள்ளிமேடுபேட்டையில் தங்கியிருந்து குடிநீா் குழாய் அமைக்கும் பணியல் ஈடுபட்டு வந்தாராம்.
இவரிடம், குறிஞ்சிபாடி வட்டம், சுப்புராயா் கோவில் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் அன்பரசு (18), அதே பகுதியைச் சோ்ந்த ரோகன், நந்தகுமாா் ஆகியோா் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனராம்.
இந்த நிலையில், அன்பரசு சரியாக பணி செய்யவில்லை எனக் கூறி அவரை பணியிலிருந்து ஏழுமலை நீக்கிவிட்டாராம்.
இதனால், ஆத்திரமடைந்த அன்பரசு, வெள்ளிமேடுபேட்டையில் இருக்கும் ஏழுமலையின் வீட்டுக்குச் சென்று அவரை இரும்புக் கம்பியால் சனிக்கிழமை தாக்கினாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அன்பரசை சனிக்கிழமை கைது செய்தனா்.