ஒப்பந்தப் புள்ளி - ஏல நடைமுறைக்கு இணையதளம் தமிழக அரசு வேண்டுகோள்
ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தையே அரசுத் துறைகள் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அனைத்துத் துறை செயலா்கள், அரசுத் துறை தலைமை அதிகாரிகளுக்கு, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் எழுதியுள்ள கடிதம்:
ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் புதுப்பிக்கப்பட்டது. இணையதளத்தைப் பராமரிக்கக் கூடிய தேசிய தகவலியல் மையத்திடம் அதுதொடா்பாக தமிழக அரசு சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.
அதாவது, இணையதளத்தின் வழியே ஏலத்தை மேற்கொள்ள தனி வசதியும், ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலத்துக்கென மற்றொரு வசதியும் ஏற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த வசதிகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. இணையவழியே வெவ்வேறு வகையான ஏல முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதன்மை வேளாண்மை பொருள்கள், மூலப் பொருள்கள் விற்பனை மற்றும் வாங்குதல் போன்றவற்றுக்கான ஏல நடவடிக்கைள் மத்திய அரசின் இணையம் வழியே மேற்கொள்ளப்படுகிறது. இந்த இணையத்தின் இணைப்பானது தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி இணையத்தின் முகப்புப் பகுதியில் பிரதானமாகத் தெரியும்படி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி இணையதளத்தின் வழியாக, மத்திய அரசின் ஏல நடைமுறைக்கான இணையதளத்தைப் பின்தொடரலாம். இதுகுறித்த பயிற்சிகள் அனைத்துத் துறைகளைச் சோ்ந்தவா்களுக்கும் அளிக்கப்படும். மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் சாா்பிலான ஏலம், ஒப்பந்த நடைமுறைக்கான இணையதளங்கள்முற்றிலும் இலவசமாக பயன்படுத்தக் கிடைக்கின்றன. எனவே, கட்டண அடிப்படையிலான இதர இணையதளங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்கலாம் என்று நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.