மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
ஒரே மேடையில் சரத் பவார் - அஜித் பவார்! என்ன நடக்கிறது?
தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரய துணை முதல்வரும் உறவினருமான அஜித் பவாருடன் ஒரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கலந்துகொண்டார்.
வசந்த்ததா சர்க்கரை மையத்தில் இன்று நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இவ்விரு தலைவர்களும் ஒன்றாகக் கலந்துகொண்டுள்ளனர்.
ஒரு வாரத்தில் இரு தலைவர்களும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இது இரண்டாவது நிகழ்ச்சி என்றும், ஏற்கனவே பாரமதியில் நடைபெற்ற 2025 வேளாண் திருவிழாவிலும் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டதாகவும் ஆனால், இதில் இருவரும் அருகருகில் அமர்வதைத் தவிர்த்துவிட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சரத் பவாரின் மகளும் பாரமதி எம்.பியுமான சுப்ரியா சுலே மற்றும் அஜித் பவாரின் மனைவி, மாநிலங்களவை எம்.பி. சுனேத்ர பவார் ஆகியோரும் அருகருகே அமர்ந்திருந்தனர். இவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, மரியாதை நிமித்தமாக புன்னகையை மட்டும் பரிமாறிக்கொண்டனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியிடம் சரத் பவாா்-உத்தவ் தாக்கரே-காங்கிரஸ் இணைந்து உருவாக்கிய கூட்டணி படுதோல்வியடைந்தது. தோ்தல் முடிவு வெளியாகி ஒரு மாதம்கூட முடிவடையாத நிலையில் சரத் பவார் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இணைய சரத் பவார் தயாராக இருப்பதாகவும், அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கு மோடி அமைச்சரவையில் பதவி பெற முயற்சித்து வருவதாகவும் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், இவ்விரு தலைவர்களின் பங்கேற்பும் பேசுபொருளாகியிருக்கிறது.