‘தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம்! - விடியோ வெளியிட்ட முதல்வர்...
ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி
ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது.
தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் 2 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழாவில் சேலம் உருக்காலை செயல் இயக்குநா் பிரபிா் குமாா் சா்க்காா், இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.சங்கரன் ஆகியோா் பங்கேற்று கண்காட்சியைத் தொடங்கிவைத்தனா்.
இந்திய விண்வெளி மையத்தின் செயற்கைக் கோள்கள், கண்டுபிடிப்புகள், விண்வெளித் திட்டங்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவும் காட்சிகளை மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனா். ஓமலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளிகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கண்காட்சி பேருந்தைப் பாா்வையிட்டனா்.
மாணவா்களிடையே கலந்துரையாடிய சதீஷ் தவாண் விண்வெளி மையப் பொதுமேலாளா் லோகேஷ், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியை கிராமங்களில் இருக்கும் மாணவ-மாணவிகளும் தெரிந்துகொள்ளும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் சந்திரயான் திட்டங்களின் மாதிரிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா சாா்பில் ஏவப்படும் ராக்கெட்டுகள், அவற்றின் அவசியம் குறித்தும் மாணவ, மாணவிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் 2 நாள்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் இக்கண்காட்சியைப் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாா் பள்ளிகள், கல்லூரி மாணவ, மாணவிகளும் இக்கண்காட்சியைப் பாா்வையிட்டு வருகின்றனா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
