ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித், விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்: முன்னாள் வீரர்
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி அவர்களது ஓய்வு முடிவினை திரும்பப் பெற்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டினைக் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், இவர்கள் ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?
டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக முக்கியமான தொடரில் விளையாடவுள்ள நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டினைக் காப்பாற்ற ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அவர்களது ஓய்வு அறிவிப்பினை கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும். இது அவர்களைப் பற்றி யோசிப்பதற்கான நேரம் கிடையாது. நாட்டு மக்கள், ரசிகர்கள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும். விராட் கோலியால் குறைந்தது இன்னும் 10 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும். ரோஹித் சர்மா என்னிடம் வந்தால், அவரை பழைய முழு உடல்தகுதிக்கு என்னால் கொண்டுவர முடியும்.
கடந்த 2011 ஆம் ஆண்டு யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் வீரேந்திர சேவாக் போன்ற வீரர்கள் எந்த ஒரு காரணமுமின்றி அணியில் சேர்க்கப்படவில்லை. யுவராஜ் சிங் ஓய்வு பெற்றபோது அழுத்தத்தின் காரணமாக முடிவெடுக்க வேண்டாம் என நான் அவரை திட்டினேன். அவர் அப்போது முழு உடல்தகுதியுடன் இருந்தார். வெளிப்புற அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அணியில் இடம்பெறுவதற்காக ஒருவர் போராட வேண்டும். பிசிசிஐ வீரர்களின் பெற்றோர் போன்று செயல்பட்டு அவர்களை பாதுகாக்க வேண்டும். வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் இருக்கக் கூடாது.
இதையும் படிக்க: 10 கிலோ உடல் எடையைக் குறைத்த சர்பராஸ் கான்!
விராட் கோலியை தொலைபேசியில் அழைத்துப் பேசுமாறு யுவராஜ் சிங்கிடம் கூறினேன். நான் செய்த அதே தவறை நீங்களும் செய்யாதீர்கள். சில ஆண்டுகள் கழித்து கண்டிப்பாக உங்களது முடிவை நினைத்து வருத்தப்படுவீர்கள் எனக் கூறுமாறு கூறினேன். அப்போது வருத்தப்பட்டு என்ன பயன்? என்றார்.
இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 9,230 ரன்களும், 67 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4,301 ரன்களும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.