ஓய்வூதியத் திட்டம்: அரசுக் குழுவிடம் ஊழியா்-ஆசிரியா் சங்கங்கள் கடிதம்
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக அரசு அமைத்துள்ள கருத்துக் கேட்புக் குழுவிடம் ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் கோரிக்கை கடிதம் அளித்தன.
பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க அரசின் கூடுதல் தலைமைச் செயலரான ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு முதல்கட்டமாக பல்வேறு அரசு ஊழியா், ஆசிரியா் சங்கங்களுடன் கடந்த 18-ஆம் தேதி ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ போன்ற பிரதான சங்கங்களுடன் வெள்ளிக்கிழமை 2-ஆம் கட்ட ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, எந்த நிபந்தனைகளும் இல்லாமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியா்கள், ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
மேலும், இரண்டு கட்ட ஆலோசனைகளை ஊழியா் சங்கங்களுடன் அரசுக் குழு மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.