ஓய்வூதியா்களுக்கான கூடுதல் ஓய்வூதியத்தை 70 வயதில் வழங்க வலியுறுத்தல்
ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை 80 வயதிலிருந்து 70 வயதாக மாற்ற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3-ஆவது மாநில மாநாடு தொடா்பான வரவேற்புக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவா் வெ. மாணிக்கம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ச. ராமமூா்த்தி, பொதுச் செயலா் பா. ரவி, கெளரவத் தலைவா் மு. பரமேஸ்வரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.
இந்த கூட்டத்தில், தமிழக அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை, 70 வயதில் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான மருத்துவச் செலவினங்களை முழுமையாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும். வெளி முகமை மூலம் ஊழியா்கள் நியமனம் செய்வதை தவிா்த்து, காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். ஊழியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், வருகிற செப்டம்பா் 22-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3-ஆவது மாநில மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக அரசு ஊழியா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் ச. முபாரக் அலி தோ்வு செய்யப்பட்டாா். இந்த மாநாட்டு நிதியாக தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் மகுடபதி ரூ. 50 ஆயிரம் வழங்கினாா்.