ஓவியங்களைக் கிழித்து, சட்டகங்களை எரித்த பாலஸ்தீன ஓவியர்..! அர்த்தமிழக்கும் கலைகள்!
காஸாவில் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தினால் பாலஸ்தீன ஓவியர் ஒருவர் தனது ஓவியங்களைக் கிழித்து, அதன் சட்டகங்களை உணவுக்காக பயன்படுத்திய விடியோ வைரலாகி வருகிறது.
பாலஸ்தீன ஓவியர் டாஹு அபு காலி என்பவர் தன்னுடைய சர்ரியலிச ஓவியங்களை கிழித்து, அதன் சட்டகங்களை எரிபொருளாகப் பயன்படுத்தியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விடியோவில் அவர் பேசியதாவது:
இந்தக் கடுமையான சோதனைக் காலத்தில் எங்களுக்கு வேறு வழியில்லை. பலகைகளை உடைத்து எரிபொருளாக மாற்றியாக வேண்டும். ஏனெனில், இங்கு மின்சாரம், எரிவாயு, மண்ணெண்ணெய் என எதுவுமே கிடைக்கவில்லை.
அர்த்தமிழக்கும் கலைகள்
எங்களுக்கு சமைப்பதற்கு கோதுமை மாவுக்கூட கிடைக்கவில்லை. நீங்கள் பார்க்கும் இவைகள் எல்லாம் எனது அழகான ஓவியங்கள்.
கலை அர்த்தங்களை வழங்கியதெல்லாம் ஒரு காலம். தற்போது, எல்லாமே போய்விட்டது. வாழ்வதற்காக எரிக்கிறோம். இந்தத் தடுப்பாட்டில் அழகும் எரிபொருளாக மாறியிருக்கின்றன என்றார்.
இந்த ஓவியர் அல் அகுசா பல்கலைக்கழகத்தில் படித்தவர். மேலும், அனுபமிக்க ஓவிய ஆசிரியராக இருக்கிறார்.
இந்த ஓவியங்களை முடிக்க ஆண்டுகள் ஆகியுள்ளன என்றும் பாதிக்கப்பட்டவர்களில் இவர்கள் மட்டும்தான் சமைப்பதாகவும் தி நேஷனல் ஊடகத்துக்கு ஐநா நிபுணர் கூறியுள்ளார்.
எப்போது முடிவுக்கு வரும்?
சமீபத்தில், காஸாவில் உணவு உள்ளிட்ட அடிப்படை மனிதாபிமான உதவிகள் பெற காத்திருந்த 72 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது.
பசியினால் 113 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் குழந்தைகள் அதிகமென காஸா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஸாவில் 22 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் உயிரிழப்பு 60,000-க்கு அருகிலும், 1.43 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.