கடைசி நேரத்தில் எழுந்த கேள்வி; மணமகள் மாமாவால் வெளிவந்த உண்மை; திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
மகாராஷ்டிராவில் சிபில் கணக்கு சரியில்லாத காரணத்தால் திருமணத்தையே மணப்பெண்ணின் குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகில் உள்ள முர்திஜாபூர் என்ற இடத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணத்திற்குப் பெண் பார்த்தனர். ஒரு இடத்தில் பெண் பார்த்து முடிவு செய்துவிட்டனர். திருமணமும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.
இரு வீட்டாரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது மணமகளின் மாமா திடீரென மணமகனின் நிதி நிலை குறித்து பேச ஆரம்பித்தார். அவர் மணமகன் வங்கியில் எதாவது கடன் வாங்கி இருக்கிறாரா என்று கேட்டார். அவர்கள் இது தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது மாப்பிள்ளையின் கடன்கள் தொடர்பாக தெரிந்து கொள்ள அவரின் சிபில் கணக்கை திறந்து பார்க்க வேண்டும் என்று பெண்ணின் மாமா தெரிவித்தார். இதனை கேட்டு மணமகன் அதிர்ச்சியடைந்தார். ஆனால் சிபில் கணக்கை பார்ப்பது என்ற முடிவிற்கு மணமகளின் குடும்பத்தினர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.
அனைவர் முன்னிலையில் மணமகனின் சிபில் கணக்கைத் திறந்து பார்த்தபோது மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்துவிட்டனர். மணமகன் பல வங்கிகளில் கடன் வாங்கியிருந்தார். அதோடு சில கடன்களை கட்டாமலும் இருந்தார். அதனைப் பார்த்த பெண்ணின் மாமா மணமகன் இந்த அளவுக்குக் கடன் வாங்கியிருந்தால் எப்படி எங்களது பெண்ணை வைத்துக் காப்பாற்றுவார் என்றும், எங்கள் பெண்ணின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வார் என்று கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத மணமகன் வீட்டார் என்ன சொல்வது என்று தெரியாமல் எதையோ சொல்லி சமாளிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் சிபில் பிரச்னை குறித்து சீரிஸாக எடுத்துக்கொண்ட மணமகள் வீட்டார் இவ்வளவு கடன் இருக்கும் ஒருவருக்கு பெண் கொடுப்பது சரியாக இருக்காது என்று முடிவு செய்து திருமணத்தையே நிறுத்திவிட்டனர். மணமகன் வீட்டார் கடன் பிரச்னையை தாங்கள் சரி செய்வதாகத் தெரிவித்தனர். ஆனால் பெண் வீட்டார் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். இறுதியில் சிபில் பிரச்னையால் திருமணம் நின்று போனது.