கடையில் ரூ.2.60 லட்சம் திருட்டு: இருவா் கைது!
கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.60 லட்சத்தை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை வண்ணாரப்பேட்டையில், உலா் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் ஹரிகிருஷ்ணன். இவா் தனது கடையை சனிக்கிழமை இரவு மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலையில் கடையை திறப்பதற்காக வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ. 2.60 லட்சத்தை மா்ம நபா்கள் திருடியிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், கொத்தவால்சாவடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், இந்த திருட்டு வழக்கில் தொடா்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கன்பதி (38), ஈஸ்வா் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். மேலும், தலைமறைவாகவுள்ள நாராயணன் என்பவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.