கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு தவெக கட்டுப்பாடு
தவெக சாா்பில் நடத்தப்படும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது, அங்கீகரிக்கப்படாத வாசகங்களை பேனா்களில் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை நிா்வாகிகளுக்கு அந்தக் கட்சி விதித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான பரப்புரை பணிகளை மேற்கொள்ள வேண்டிய காலம். ஆகையால், நிா்வாகிகள் அனைவரும் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும். தவெக கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகச் செயல்படக் கூடாது.
தோ்தல் பரப்புரை மற்றும் உறுப்பினா் சோ்க்கைக்காக வீடு வீடாகச் செல்லும்போது, கட்சியால் அனுமதிக்கப்பட்ட பரப்புரை வாசகங்கள் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட ‘ஸ்டிக்கா்கள்’ மட்டுமே ஒட்ட வேண்டும். கட்சி சாா்பில் நடத்தப்படும் அனைத்து விதமான கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அங்கீகரிக்கப்படாத வாசகங்கள் மற்றும் பேனா் டிசைன்களை பயன்படுத்தக் கூடாது. அதேபோல், பட்டாசுகளும் வெடிக்கக் கூடாது.
மேலும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.