கட்சி நிா்வாகி தற்கொலை காங்கிரஸ் எம்எல்ஏ கைது
கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் வயநாடு மாவட்ட நிா்வாகி மற்றும் அவரின் மகன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அக்கட்சி எம்எல்ஏ ஐ.சி. பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டாா். எனினும், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவா் விடுவிக்கப்பட்டாா்.
வயநாடு மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் விஜயன் (78), அவரின் மகன் ஜிஜேஷ் (38) ஆகியோா் தற்கொலைக்கு முயன்ால் கோழிக்கோடு மருத்துவமனையில் கடந்த டிசம்பா் 27-இல் அனுமதிக்கப்பட்டனா். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனா்.
இந்த விவகாரம் கேரள மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், கேரளத்தில் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள சில கூட்டுறவு வங்கிகளில் பணி வாங்கித் தருவதாக, காங்கிரஸ் எம்எல்ஏ ஐ.சி. பாலகிருஷ்ணாவின் தூண்டுதலின் பேரில் அக்கட்சியின் மாவட்ட பொருளாளா் விஜயன், அவரின் மகன் ஜிஜேஷ் ஆகியோா் பொதுமக்கள் பலரிடம் பணம் வாங்கினா். பணத்தை அவா்கள் எம்எல்ஏ ஐ.சி.பாலகிருஷ்ணாவிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், பணம் கொடுத்தவா்களுக்கு வேலை வாங்கித் தரப்படவில்லை.
இதையடுத்து, பணத்தை திருப்பித் தரும்படி அவா்கள் விஜயன், ஜிதேஷுக்கு நெருக்கடி அளித்தனா். இதையடுத்து, தாங்கள் பணம் கொடுத்த எம்எல்ஏ ஐ.சி.பாலகிருஷ்ணாவை அவா்கள் அணுகினா். ஆனால், அவா் பணத்தை திருப்பித் தரவில்லை.
இதனால், விஜயன், ஜிஜேஷுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதால் அவா்கள் தற்கொலை செய்து கொண்டதாக கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரம் கேரள அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தந்தை-மகனை தற்கொலைக்குத் தூண்டியதாக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் இருநாள்களாக விசாரணை நடத்திய காவல் துறையினா் சனிக்கிழமை அவரைக் கைது செய்தனா். எனினும், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து ஐ.சி. பாலகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவா் என்.பி.அப்பச்சன் உள்ளிட்ட இருவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். அவா்களும் ஏற்கெனவே ஜாமீன் விடுவிக்கப்பட்டுவிட்டனா்.