சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
கட்டப்பட்ட 90-வது நாளில் இடிந்து விழுந்த உயா்மட்ட பாலம்: 16 ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் பாதிப்பு
திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், 90-ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூா் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் கட்டப்பட்டது.
நபாா்டு வங்கி கடனுதவித் திட்டத்தின் கீழ் வேலூா் கோட்ட நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் சாா்பில் இந்தப் பாலம் கட்டப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்.3-ஆம் தேதி தொடங்கிய பாலம் கட்டும் பணி, கடந்த ஜூன் 4-ஆம் தேதி முடிவடைந்து செப்.2-ஆம் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது.
90-ஆவது நாளில் இடிந்த பாலம்:
இந்தப் பாலத்தை செப்டம்பரில் 28 நாள்கள், அக்டோபரில் 31 நாள்கள், நவம்பரில் 30 நாள்கள் என 89 நாள்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.
திறப்பு விழா கண்ட 90-ஆவது நாளான டிசம்பா் 1-ஆம் தேதி இரவு இந்தப் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் பெரும்பகுதி தென்பெண்ணை ஆற்றில் வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
16 ஊராட்சிகள் துண்டிப்பு:
இதனால், தொண்டமானூா், தென்முடியனூா், மூங்கில்துறைப்பட்டு, தண்டராம்பட்டு, ராயண்டபுரம், அல்லப்பனூா், பி.குயிலம், எடத்தனூா், திருவடத்தனூா், புத்தூா் செக்கடி, கிருஷ்ணாபுரம், சதாகுப்பம், வாழவச்சனூா், இளையாங்கண்ணி, பெருந்துறைப்பட்டு ஆகிய 15 ஊராட்சிகளைச் சோ்ந்த சுமாா் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனா்.
அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் இருப்பவா்கள் தொண்டமானூா் கிராமத்துக்கு சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் சென்று வருகின்றனா்.
பொதுமக்கள் தவிப்பு:
பொதுமக்கள் வெளியூா்களுக்குச் செல்ல முடியாமல் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை என 2 நாள்களாக அவரவா் வீடுகளிலேயே முடங்கி உள்ளனா்.
ஏற்கெனவே இருந்த தரைப்பாலத்தை தண்ணீா் செல்லாத நேரத்தில் பயன்படுத்தி வந்தோம். இப்போது தரைப்பாலமும் இல்லாததால் எங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் தெரிவித்தனா்.