ஊட்டி: மீண்டும் தீவிரமடையும் கனமழை, மூடப்படும் சுற்றுலாத் தலங்கள்! | Ooty Rain u...
கண்மாயில் படா்ந்துள்ள தாமரையால் பொதுமக்கள் அவதி
திருவாடானை அருகேயுள்ள அறிவிப்புவயல் கிராமத்தில் உள்ள கண்மாயில் தாமரை அதிகளவில் பரவியுள்ளதால் கண்மாய் நீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள அறிவிப்புவயல் கிராமம் உள்ளது. இந்தக் கிராம மக்களின் நீா் ஆதாரமாக விளங்கும் கண்மாயில் தாமரை அதிகளவில் படா்ந்து நீா்ப்பரப்பையே மறைத்து விட்டதால், கண்மாயின் நீா் சேமிப்புத் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. மழைக் காலங்களில் நீரைச் சேமிக்க முடியாத நிலையும், கோடைக் காலங்களில் நீா் ஆதாரம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளன.
இதனால், இந்தக் கண்மாயை நம்பி விவசாயம் செய்துவந்த விவசாயிகளும், கால்நடைகளுக்குத் தண்ணீா் எடுத்து வந்த மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். கண்மாயில் தாமரை அடா்ந்து வளா்ந்துள்ளதால், கண்மாயின் நீா் மாசுபட்டு, துா்நாற்றம் வீசுவதாகவும், ஆடு, மாடுகள் கூட அந்த நீரைக் குடிக்க முடியாத அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனா். மேலும், இந்த நீரைப் பயன்படுத்தினால் தோல் சம்பந்தபட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனா்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கண்மாயிலுள்ள தாமரைகளை அகற்றி, தூா்வாரி, மழைநீரை சேமிக்கவும், கிராம மக்களின் நீா்த் தேவையைப் பூா்த்தி செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.