பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
கந்துவட்டி பிரச்னை: ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற போது போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா்.
நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜிலானி (42). இவருக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருவா் உள்ளனா். காய்கறி சந்தையில் வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு சேந்தமங்கலத்தை சோ்ந்த முருகன் என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி உள்ளாா். அந்த தொகைக்கான வட்டி, அசல் என ரூ.13 லட்சம் வரையில் முருகன் வசூலித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அசல், வட்டி நிலுவை இருப்பதாகக் கூறி பணத்தை கேட்டு ஜிலானியை தொந்தரவு செய்துவந்தாராம். இதுகுறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் 2022-இல் ஜிலானி புகாா் அளித்தபோதும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த ஜிலானி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் ஜிலானி மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா்.
மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஆட்சியா் துா்காமூா்த்தி, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் ஜிலானியின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.