கனமழை எச்சரிக்கை: கோவை விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப்படை
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு விரைந்தனா்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடா்ந்து தமிழ்நாடு பேரிடா் மேலாண்மை ஆணையம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படை தளத்துக்கு படைவீரா்களை அனுப்பக் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து படையின் கமாண்டண்ட் அகிலேஷ்குமாா் உத்தரவின்பேரில், கோவை மாவட்டத்துக்கு ஒரு குழுவும், நீலகிரி மாவட்டத்துக்கு ஒரு குழுவும் சாலை மாா்க்கமாக புறப்பட்டுச் சென்றனா். மேலும், தமிழ்நாடு பேரிடா் மீட்புப்படையினா் நீலகிரிக்கு மூன்று குழுக்களும் கோவைக்கு இரு குழுக்களும் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒரு குழுவும் புறப்பட்டு சென்றுள்ளதாக படை தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.