சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!
கப்பல்களுக்கு கட்டண விலக்கு: அமெரிக்க அறிவிப்பை மறுத்த பனாமா!
பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், அதனை பனாமா கால்வாய் நிர்வாகம் மறுத்துள்ளது.
அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைப்பதற்காக அமெரிக்காவின் பெரும் நிதியுடன் பனாமாவில் 1914ஆம் ஆண்டு கால்வாய் உருவாக்கப்பட்டது. அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் இயங்கிய பனாமா கால்வாய், பெரும் அரசியல் போராட்டங்களுக்கு பிறகு பனாமா நாட்டிடன் 1999-ல் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப், பனாமா கால்வாயில் அமெரிக்காவின் போர்க்கப்பல் மற்றும் வணிக கப்பல்களுக்கு நியாயமற்ற கட்டணங்கள் வசூலிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த வாரம் பனாமா நாட்டுக்குச் சென்று அந்நாட்டின் அதிபரை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இதன்மூலம் பல மில்லியன் டாலர்கள் சேமிக்கப்படும் என்று அமெரிக்க அரசு புதன்கிழமை தெரிவித்திருந்தது.
ஆனால், அமெரிக்க அரசின் அறிவிப்பை பனாமா கால்வாய் ஆணையம் நிராகரித்துள்ளது.
இதையும் படிக்க : இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா
இதுதொடர்பாக பனாமா கால்வாய் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,
“அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செய்தி வெளியிடப்படுகிறது. கால்வாயின் சுங்கக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை நிர்ணயிக்க பனாமா கால்வாய் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. நாங்கள் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்க அரசு மற்றும் போர்க்கப்பல் போக்குவரத்து தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் உரையாட ஆணையம் தயாராக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.