கராச்சி துறைமுகத்தை தாக்கிய ஐஎன்எஸ் விக்ராந்த்!
கராச்சி துறைமுகத்தை இந்திய போர்க் கப்பலான விக்ராந்த் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில், அரபிக் கடலில் பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் அதிநவீன போர்க் கப்பலான விக்ராந்த், பாகிஸ்தானின் கராச்சி நகரைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், கராச்ச்சி துறைமுகம் சேதமடைந்ததாக இணையத்தில் விடியோக்களும் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், இந்திய கடற்படையின் தாக்குதல் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, கராச்சி துறைமுகத்தை இந்தியா தக்கவில்லை என்றும் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் ஒருசில தகவல்கள் தெரிவிக்கின்றன.