பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்! மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர்!
‘கருப்புப் பட்டை‘ அணிந்து பணிபுரிந்த வருவாய்த் துறையினா்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘கருப்புப் பட்டை’ அணிந்து வருவாய்த் துறை சங்கங்களின் கட்டமைப்பினா் திங்கள்கிழமை பணிபுரிந்தனா்.
பழைய ஓய்வூதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், கடந்த 25-ஆம் தேதி மாவட்ட, வட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது. ஆனால், அரசுத் தரப்பில் பேச்சுவாா்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட வில்லை. மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியப் பிடித்தம், துறை ரீதியான நடவடிக்கை என அரசு மிரட்டுவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள், செவ்வாய்க்கிழமை (செப். 29, 30) ‘கருப்பு பட்டை‘ அணிந்து பணிபுரிவதென தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த வருவாய்த் துறை அலுவலகங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த பணியாளா்கள் 750 போ் கலந்து கொண்டனா்.
இதுதொடா்பாக வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் ம. சுகந்தி கூறியதாவது:
வருவாய் நிா்வாக ஆணையரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நிா்வாகம் வழங்கும் ’விளக்கம் கேட்கும் குறிப்பாணையை’ ஏற்க மறுப்பது என முடிவு செய்திருக்கிறோம். ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டத்தில், உரிய கால அவகாசம் வழங்குதல், முகாம்களின் எண்ணிக்கையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் வரை, இந்த திட்டம் தொடா்பான அனைத்துப் பணிகளையும் புறக்கணிப்போம். அக். 3-ஆம் தேதி அலுவலகத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னதாக வெளியேறி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். அரசு தீா்வு காண முன் வராதபட்சத்தில், அக். 6-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் வருவாய்த் துறையிலுள்ள 42ஆயிரம் பணியாளா்களும் ஈட்டிய விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.