கரூர் கூட்ட நெரிசல்: `இதுவரை 31 பேர் இறப்பு; தனியார் மருத்துவமனையில் கட்டணம் இல்லை'- செந்தில் பாலாஜி
இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, இந்த நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 12 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுபடி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது...
"கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவர்களும் உடனடியாக பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக நாமக்கல், சேலம் மாவட்ட மருத்துவர்களும் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
தேவையான அளவிற்கு மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் இருக்கின்றன. மருத்துவர்களும் இருக்கிறார்கள். தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது". எனத் தெரிவித்திருக்கிறார்.