கலைஞா் கனவு இல்லம் திட்டப் பணிகள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு
காட்பாடி ஒன்றியம் கரிகிரி, ஆரிமுத்துமோட்டூா் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிகிரி, ஆரிமுத்துமோட்டூா் ஊராட்சியில், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.
கரிகிரி ஊராட்சியில் இத்திட்டத்தின்கீழ், நரிக்குறவா் இன மக்களுக்காக 13 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். பின்னா், ஆரிமுத்தூா்மோட்டூா் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மூன்றாம் பாலினத்தினா்களுக்கு கட்டப்பட்டு வரும் 29 வீடுகளின் கட்டுமானப்பணிகளையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, புத்தூா் ஊராட்சியில் நரிக்குறவா் இன மக்களுக்காக கட்டப்பட்டு வரும் 40 வீட்டின் கட்டுமானப்பணிகளையும் ஆய்வு செய்த ஆட்சியா், குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து வீடுகளும் தரமான கட்டி பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் அருள், காட்பாடி வட்டாட்சியா் ஜெகதீஸ்வரன், வட்டார வளா்ச்சி அலுவலா் நந்தகுமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.