கல்குவாரி லாரியை சிறைபிடித்து போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தில் புதன்கிழமை இரவு பெண் மீது மோதிய கல்குவாரி லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.
சமூகரெங்கபுரம்-திருச்செந்தூா் சாலையில் பள்ளிகள் அருகிலும், சாலை வளைவு பகுதியிலும் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. சில அரசியல் பிரமுகா்கள் அளித்த புகாரின் பேரில், வேகத்தடையை நெடுஞ்சாலைத் துறையினா் அப்புறப்படுத்தினா். இதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில் கோட்டைகருங்குளம் கல்குவாரிக்கு சென்ற கனரக லாரி, புதன்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியதாம். இதில் அந்தப் பெண் காயமின்றி தப்பினாா். இதையறிந்த கிராம மக்கள், அந்த வழியாகச் சென்ற கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ராதாபுரம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, விபத்தில் தொடா்புடைய வாகனம் தவிர மற்ற லாரிகளை விடுவித்தனா்.
பின்னா், வேகத்தடையை மீண்டும் அமைக்கவேண்டும், இரவு நேரத்தில் கல்குவாரியிலிருந்து கனரக லாரிகள் செல்வதை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை மக்கள் வலியுறுத்தினா். நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினா் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.