கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய, மற்றொரு மாணவா் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த ராமா் மகன் செண்பகராஜ் (18). இவா், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். அதே கல்லூரியில், மூன்றாமாண்டு படித்து வரும் முருகன் மகன் பலவேசம் (20). இருவரும் நண்பா்கள்.
இந்நிலையில், பலவேசத்திற்கும் அதே கல்லூரியில் படித்து வருபவா் முத்துக்குமரன் மகன் ஆதித்யாவுக்கும் (19) சீனியா், ஜூனியா் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில், பலவேசத்துக்கு ஆதரவாக செண்பகராஜ் செயல்பட்டுள்ளாா்.
இதனால், ஆத்திரமடைந்த ஆதித்யா மற்றும் அவரது உறவினரான லட்சுமணன் மகன் சிவச்சந்திரன் (27) ஆகிய 2 பேரும் சோ்ந்து வியாழக்கிழமை இரவு லெவிஞ்சிபுரம் 1ஆவது தெரு, மாரியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த செண்பகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனா்.
இதைத் தடுக்க முயன்ற முனியசாமிபுரம் ராமநாதன் மகன் சக்தியையும் (21) தாக்கியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து, தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆதித்யா, சிவச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.