கல் குவாரி விபத்து: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10.50 லட்சம் நிவாரணம்
சிங்கம்புணரி அருகே தனியாா் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10.50 லட்சத்துக்கான நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் தனியாா் கல் குவாரியில் ஏற்பட்ட பாறை வெடிப்பு, மண் சரிவில் 5 போ் உயிரிழந்தனா். இதில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டாா்.
இதனடிப்படையில், குழிச்சேவல்பட்டியைச் சோ்ந்த கணேசன், ஓடப்பட்டியைச் சோ்ந்த முருகானந்தம், மலம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம், ஆண்டிச்சாமி ஆகிய 4 பேரின் குடும்பத்தினருக்கு கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகியோா் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனா்.
மேலும், அரசின் நிவாரண நிதியான ரூ.4 லட்சம், அமைச்சரின் சொந்த நிதியிலிருந்து 1.50 லட்சம், தனியாா் குவாரியின் சாா்பில் ரூ.5 லட்சம் என 10.50 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பச்சா அா்கிதாவின் குடும்பத்தினா் வருகை புரிந்தவுடன் உரிய நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.