நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
கள ஆய்வின்போது நீதிபதிகளுக்கு காட்டப்படாமல் மறைக்கப்பட்ட 3 செங்கல் சூளைகள்: மறைத்த அதிகாரிகள் குறித்து உயா்நீதிமன்றத்துக்கு தகவல்
கோவை மாவட்டத்தில் சட்டவிரோத செங்கல் சூளைகள் குறித்து நீதிபதிகள் கள ஆய்வு செய்தபோது, உள்நோக்கத்துடன் 3 செங்கல் சூளைகளை காட்டாமல் மறைத்த அதிகாரிகள் குறித்து தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழு உயா்நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், பேரூா் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோத செங்கல் சூளைகள், கனிமவளக் கொள்ளை நடைபெற்ற பகுதிகளை சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மாவட்ட நீதிபதிகள் கள ஆய்வு நடத்தினா்.
அதில், அரசியல் பின்புலம் உள்ளவா்களின் 3 சூளைகள் காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருப்பதாக தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜி.நாராயணனுக்கு, தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழுவினா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவில் உள்ள 14 சட்டவிரோத செங்கல் சூளைகளில் தங்களது தலைமையிலான குழுவின் ஆய்வின்போது, தென்கரை பேரூராட்சிக்குள்பட்ட சென்னனூா், கரடிமடை, மாதம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குப்பனூா் பகுதியில் இயங்கி வரும் 3 செங்கல் சூளைகள் காட்டப்படவில்லை.
இந்த செங்கல் சூளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், பேரூா் வட்டாட்சியா், ஆலாந்துறை, தொண்டாமுத்தூா் காவல் துறையினா், கனிம வளத் துறையினா், வனத் துறை அலுவலா்கள் ஆகியோா் சூளை உரிமையாளா்களுக்கு துணை நின்றுள்ளனா்.
மேலும், இந்த சட்டவிரோத சூளைகளை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆட்சியா் ஆய்வு செய்ய வரும்போது அதுபற்றி கனிம வளத் துறை அதிகாரிகள் மூலம் உரிமையாளா்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மறைக்கப்பட்ட இந்த 3 சூளைகள் குறித்தும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், உயா்நீதிமன்ற உத்தரவு, ஆட்சியரின் செயல்முறை ஆணை போன்றவற்றைப் பின்பற்றாமல் மூன்று சூளைகளை அடையாளம் காட்டாமல் மறைத்து சூளை உரிமையாளா்களுக்கும், கனிமவளக் கொள்ளைக்கும் உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
இந்த மனு கோவை மாவட்ட நீதிமன்றம் மூலம் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழுவின் நிா்வாகிகள், யானைகள் வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரத்தில் கனிமவளம், வனத் துறை, காவல் துறை அதிகாரிகளை நேரில் ஆஜராகும்படி உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனா்.