காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 15 ஆடுகள் உயிரிழப்பு!
காங்கயம் அருகே விவசாயியின் ஆட்டுப்பட்டியில் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் 15 செம்மறியாடுகள் உயிரிழந்தன. 8 ஆடுகள் காயமடைந்தன.
காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை அருகே உள்ள சாவடிப்பாளையம் மூலக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (60), விவசாயி. இவா் தனது தோட்டத்தில் 80 செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு, தூங்கச் சென்று விட்டாா்.
பின்னா், சனிக்கிழமை காலையில் பட்டிக்கு சென்று பாா்த்தபோது, அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 15 ஆடுகள் உயிரிழந்ததும், 8 ஆடுகள் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து காங்கயம் போலீஸாா், கால்நடை மருத்துவா்களுக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. அவா்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இரவில் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள், ஆடுகளைக் கடித்துக் குதறிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.