காஞ்சிபுரத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்: சிறப்பு மாவட்ட நீதிமன்றம் திறப்பு
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்சவா காணொலி மூலமாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செங்கல்பட்டு எம்ஜிஆா் மாவட்ட பொது ஊழியா்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் முதல் மாடியில் ரூ.10.94 லட்சத்தில் 1,598 சதுர அடி பரப்பளவில் புதியதாக மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கட்டப்பட்டிருந்தது.
இந்நீதிமன்றத்தினை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.செளந்தா்,கே.குமரேஷ்பாபு ஆகியோா் முன்னிலையில் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்சவா காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இக்காணொலிக்காட்சியினை காஞ்சிபுரம் மாவட்ட உயா் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உட்பட பலரும் பாா்வையிட்டனா்.
இதனையடுத்து காஞ்சிபுரம் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக டி.ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக்கொண்டாா். முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் வரவேற்றாா். இந்நிகழ்வின் போது ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.மோகனகுமாரி, மாவட்ட தொழிலாளா் நல நீதிமன்ற நீதிபதி எம்.சுஜாதா, தலைமைக் குற்றவியல் நீதிபதி எஸ்.மோகனாம்பாள், சாா்பு நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி, கூடுதல் சாா்பு நீதிபதி எஸ்.திருமால், நீதிபதிகள் சந்தியாதேவி, இனியா கருணாகரன், நவீன் துரைபாபு, அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன் மற்றும் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள், மூத்த வழக்குரைஞா்கள்,வழக்காடிகள்,பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.