பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா?
காஞ்சிபுரம்- கோயம்பேடு குளிா்சாதன பேருந்து போக்குவரத்து: அமைச்சா் ஆா்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடுக்கு செல்லும் குளிா்சாதன பேருந்தை கைத்தறித் துறை, துணி நூல் அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி கோயம்பேடுக்கு செல்லும் வகையில் குளிா்சாதன பேருந்து வேண்டும் என எம்எல்ஏ எழிலரசன் காஞ்சிபுரம் வந்திருந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தாா். எம்எல்ஏ எழிலரசனின் வேண்டுகோளை ஏற்று துணை முதல்வா் குளிா்சாதன பேருந்து விடுமாறு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தாா். அவரது அறிவுரையின்படி, காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரத்துக்கு குளிா்சாதன பேருந்து மக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குளிா்சாதன பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசுப் போக்குவரத்துக் கழக துணை வணிக மேலாளா் ஸ்ரீதா் வரவேற்றாா். கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதிய குளிா்சாதன பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா், அமைச்சா் உள்பட முக்கியப் பிரமுகா்கள் அனைவரும் அந்தப் பேருந்தில் சிறிது தூரம் பயணித்து திரும்பினா். ஒரு முறை குளிா்சாதன பேருந்தில் காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடு செல்ல ரூ. 85 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், போக்குவரத்துக் கழக துணை மேலாளா் தெட்சிணாமூா்த்தி, காஞ்சிபுரம் கிளை மேலாளா் சீனிவாசன், மாமன்ற உறுப்பினா் மல்லிகா ராமகிருஷ்ணன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.