கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவுக்கு அயலகத் தமிழா்கள் வருகை
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவை அயலகத் தமிழா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.
அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் தமிழக அரசின் வோ்களைத் தேடி திட்டத்தின் கீழ் 14 நாடுகளைச் சோ்ந்த 20 ஆண்கள், 75 பெண்கள் உட்பட 95 போ் காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பாா்வையிட வந்திருந்தனா்.
30 வயதுக்கு உட்பட்ட இவா்கள் அனைவரும் சுமாா் 5 தலைமுறைகளுக்கு முன்பாக தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவா்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழா்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள இவா்கள் அழைத்து வரப்பட்டு கோயில்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டு வருகின்றனா்.
இவா்கள் 95 பேரும் காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலைகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன. அதன் விலை, ஏற்றுமதி, வடிவமைப்பு மற்றும் வகைகள் பற்றி தெரிந்து கொண்டனா். பட்டுப்பூங்காவை பாா்வையிட்ட பின்னா் பட்டுப்பூங்கா கூட்ட அரங்கிலிருந்த காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடினா்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அதிகாரி செ.வெங்கடேஷ், சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ச.ரவிச் சந்திரன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ரமேஷ்பாபு, தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் பாரதி, காஞ்சிபுரம் வட்டாட்சியா் ரபீக் அயலகத் தமிழா்களுடன் கலந்துரையாடினாா்கள்.
மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் புத்தகம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கண்காணிப்பாளா்கள் கனிமொழி, தனலட்சுமி ஆகியோரும் உடன் இருந்தனா்.