காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!
மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டிய நிலையில், தீரத்துடன் பெண்ணை மீட்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
இளம் வயது பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்தப் பெண் 10ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறார் என்றும், பள்ளி முடிந்து திரும்பும்போது நாள்தோறும் அந்த இளைஞர் வந்து பெண்ணை தொல்லை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதுபோல, அன்றைய தினமும், இளைஞர் தன்னுடைய காதலைச் சொல்ல, அப்பெண் அதனை ஏற்க மறுத்ததால், தன்னுடைய பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்தில் வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.
அங்கிருந்த பலரும், அப்பெண்ணை எதுவும் செய்துவிட வேண்டாம் என்று கெஞ்சியிருக்கிறார்கள். யார் சொல்வதையும் அவர் கேட்காத நிலையில், ஒருவர், பின்னால் இருந்த சுவர் மீது ஏறி குதித்து வந்த இளைஞரை லாவகமாகப் பிடித்து, அவரது கையிலிருந்து கத்தியை பறித்தார். பிறகு அப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞரை அங்கிருந்தவர்கள் அடித்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இளைஞர்கள், இவ்வாறு காதலை மறுக்கும் பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது மக்களையும், சிறார்களின் பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.