காபோன் நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல்! ராணுவ அரசு அறிவிப்பு!
மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் வருகின்ற 2025 ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.
காபோன் நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபர் அலி போங்கோ ஒண்டிம்பாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜெனரல் பிரைஸ் க்ளோடையர் நிக்யூமா தலைமையிலான ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜன.19 அன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் புதிய தேர்தல் முறைகளும், விதிகளும் ஏற்றுகொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காபோனின் அரசியலமைப்பு நீதிமன்றம் அந்நாட்டில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் ராணுவ அதிகாரிகள் போட்டியிட அனுமதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மிகவும் சர்ச்சையான இந்த முடிவு அந்நாட்டில் கடந்த காலங்களில் சாத்தியமற்றதாக இருந்த நிலையில் தற்போது ஏற்றுகொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் அதற்கு வழிவகுத்துள்ளது.
இதையும் படிக்க: சூடான உணவை ஆறவைக்கும் பூனை! ஜப்பான் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு!
இதன்படி, நடக்கவிருக்கும் தேர்தலின் மூலம் தற்போதைய ராணுவ ஆட்சியின் அதிபர் ஜெனரல் பிரைஸ் அதிகாரப்பூர்வமாக அந்நாட்டின் அதிபராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024 நவம்பர் மாதம் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட காபோனின் அரசியலமைப்பு, அந்நாட்டு அதிபரின் பதவிக் காலத்தை 7 ஆண்டுகளாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.