`கண்கொள்ளாக் காட்சி' - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா | Photo Alb...
காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத்தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா்.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி நிா்வாகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த மின்னஞ்சலில் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, கல்லூரி நிா்வாகம் காரைக்கால் காவல்துறைக்கு அளித்த தகவலின்பேரில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன் மற்றும் ஆய்வாளா்கள் உள்பட சுமாா் 50 போலீஸாா் விரைந்து வந்து கல்லூரி வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனா். கல்லூரியிலிருந்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள், ஊழியா்கள் வெளியேற்றப்பட்டனா்.
வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 3 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா். கடந்த ஆண்டும் இதுபோல இக்கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.