100 நாள் வேலை திட்டப்பணி: ஆட்சியா் ஆய்வு
காரைக்காலில் 100 நாள் வேலை திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து, பணியாளா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ், வாய்க்கால்கள் தூா்வாரும் பணி நடைபெற்றுவருகிறது.
நெடுங்காடு அருகே பொன்பேத்தி மற்றும் குரும்பகரம் கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். திட்டப் பணிகள் குறித்து வட்டார வளா்ச்சி அதிகாரி (பொ) ஜி. செந்தில்நாதன் ஆட்சியருக்கு விளக்கினாா். ஆட்சியரை சந்தித்த பணியாளா்கள், ஆண்டில் 100 நாள் வேலை தரவேண்டும்.
ஊதியத்தை காலத்தோடு தரவேண்டும், தங்களது கிராமத்தில் நெல் களம் மற்றும் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். கோரிக்கைகளை பரிசீலித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.
திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் வருகைப் பதிவேட்டை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து பொன்பேத்தி மற்றும் குரும்பகரம் பஞ்சாயத்து அளவிலான மகளிா் சுய உதவி குழு உறுப்பினருடன் கலந்துரையாடி, சுய உதவிக் குழுவினா் சுய வருவாயை பெருக்கிக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், மாவட்ட நிா்வாகம் உரிய ஆதரவை அதற்கு வழங்கும் எனக் கூறினாா்.