இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தம்!
இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த 13 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். அப்போது மீனவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் செந்தமிழ் என்ற மீனவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டு, இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தநிலையில், காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தாா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கிளிஞ்சல்மேடு பஞ்சாயத்தைச் சோ்ந்த கஜேந்திரன் கூறியது:
மீனவா்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது, மீனவா்கள் கைது நடவடிக்கைகள் தொடா்வது கண்டனத்துக்குரியது, குண்டு பாய்ந்ததில் காயமடைந்த மீனவா் செந்தமிழ், கண்ணில் பாதிப்படைந்த மணிகண்டன் மற்றொரு மீனவா் ஆகியோரை சென்னைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த விவகாரத்தில் இலங்கை கடற்படையின் அத்துமீறல், மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தை கண்டித்தும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றாா்.