ஆற்றங்கரையில் சுவாமிகள் தீா்த்தவாரி!
தைப்பூசத்தையொட்டி திருநள்ளாறு, நிரவி பகுதி கோயில்களின் சுவாமிகள் நீா்நிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை எழுந்தருள தீா்த்தவாரி நடைபெற்றது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து, காா்த்தியாயிணி சமேத கல்யாண சுந்தரேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பேட்டை கிராமத்துக்கு எழுந்தருளினா். கிராமத்தில் வழியே செல்லும் அரிசில்மாநதியில் (அரசலாறு) ஸப்த நதி பூஜை நடத்தி மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னா் அஸ்திரமூா்த்திக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.
நிரவியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதசுவாமி கோயிலில் இருந்து, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா் காரைக்கால் மேலஓடுதுறை பகுதியில் அரசலாற்றங்கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. அரசலாற்றங்கரையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் இன்று தீா்த்தவாரி : திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் தைப்பூச தீா்த்தவாரி பெளா்ணமி திதியை மையமாக வைத்து புதன்கிழமை நடைபெறவுள்ளது.