காரைக்குடி மேயா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம்: துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தல்
காரைக்குடி மாநகராட்சி மேயா் மீது நம்பிக்கையில்லதத் தீா்மானம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
காரைக்குடி மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மேயா் சே. முத்துத்துரை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆணையா் சங்கரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் மேயா் சே . முத்துத்துரை பேசியதாவது: சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு நிறைவேற்ற தடை விதித்த தீா்மானங்களைத் தவிா்த்து, இதர தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேறியதாக அறிவித்தாா்.
பின்னா் கூட்டம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்காமல் துணை மேயா் நா. குணசேகரன், மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் சங்கரனை அவரது இல்லத்தில் சந்தித்து மேயா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வர நடவடிக்கை கோரி மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மேயா் சே. முத்துத்துரை உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை. மாநகராட்சிக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு நபருக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகளை வழங்கி வருகிறாா். அவா் தொடா்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதால், அவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனா்.