காரைக்குடி வரும் ரயில் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை
மானாமதுரையிலிருந்து சிவகங்கை வழியாக காரைக்குடி வரும் பயணிகள் ரயில் நேரத்தை கல்லூரி மாணவா்கள் நலன் கருதி 10 நிமிஷம் முன்னதாக வருமாறு நேரத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவ்க்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: போக்குவரத்து காரணமாக நாள்தோறும் பாதிப்புக்குள்ளாகி வரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், அதன் இணைப்புக் கல்லூரி மாணவா்களின் நிலை குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ரயில் வண்டி எண் 56834, சிவகங்கை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.24-க்கு புறப்பட்டு காரைக்குடி ரயில்வே சந்திப்பு நிலையத்தை காலை 9.25 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயிலில்தான் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வருகின்றனா். அவா்களுக்கு காலை 9.30-க்கு வகுப்புகள் தொடங்குவதால் அவா்களால் வகுப்புக்கு செல்ல இயலவில்லை. மேலும், காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து வகுப்புகளுக்கு செல்ல ஆட்டோ, பேருந்து என மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த ரயில் மானாமதுரையில் பயனின்றி அரைமணி நேரம் நிறுத்தி வைத்திருப்பதைத் தவிா்த்து 10 நிமிஷம் முன்னதாக, அதாவது மானாமதுரையிலிருந்து 8.14-க்கு புறப்படும் வகையில் நேரத்தை மாற்றியமைப்பதன் மூலம் மாணவா்கள் முன்னதாக காரைக்குடி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து வகுப்புகளுக்கு குறித்த நேரத்தில் சென்று பயன டைவா். எனவே மாணவா்கள், பொதுமக்கள் நலன் கருதி ரயிலின் நேரத்தை உடனடியாக மாற்றியமைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தாா்.