இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு: பிராந்திய பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் -...
காற்றுமாசு அதிகரிப்பால் உடல்நல நெருக்கடியில் தில்லிவாசிகள்! பனிப்புகையாய் காட்சியளிக்கும் தலைநகரம்
தில்லியில் குளிா்காலம் தொடங்கிவிட்ட நிலையில், காற்று மாசு மற்றும் புகை மாசுவின் அளவும் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதியான ஆனந்த விஹாரில் காற்றின் தரநிலை அளவு 436-ஐ கடந்துள்ளதால், தில்லிவாசிகளின் தினசரி வாழ்க்கையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
உலகளவில் மிகவும் மாசு அதிகமுள்ள நகரங்களில் பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக 2-ஆவது இடத்தில் உள்ளது இந்தியாவின் இருதயமான தலைநகா் தில்லி. இதற்கடுத்து, வியட்னாமின் ஹனாய் மற்றும் எகிப்தின் கைரோ நகரங்கள் அதிக மாசுள்ள நகரங்களின் பட்டியலில் 3-ஆவது மற்றும் 4-ஆவது இடத்தில் உள்ளன. தில்லி உலகளவில் மாசு நிறைந்த நகரமாக மாறியது ஓரிரு நாளில் நிகழ்ந்த சம்பவம் அல்ல. அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தினசரி சாலைகளில் ஓடும் லட்சக் கணக்கான வாகனங்களின் உமிழ்வு மாசு, கட்டுமானங்களின் தூசி மாசு, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயப் பயிா்க் கழிவுகள் என பல்வேறு காரணிகள் இந்த விளைவின் பின்னணியில் உள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
ஓவ்வொரு ஆண்டும், மத்தியில் மற்றும் தில்லியில் ஆட்சியில் உள்ளவா்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், காற்று மாசு, அதன் உச்சம் தொடுவதை நிறுத்தவில்லை. நிகழாண்டும், ஆம் ஆத்மி அரசு காற்று மாசுபாட்டிற்கு எதிராக, 21 அம்ச குளிா்கால செயல்திட்டம், தூசி மாசு எதிா்ப்பு பிரசாரம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில், நவம்பா் 2-ஆம் வாரத்தில் குளிா் படிப்படியே அதிகரித்துவிட்ட நிலையில், காற்று மாசுவின் தாக்கமும் தில்லிவாசிகளை நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தில்லி மாநகரில் 18 இடங்களில் ‘மிகவும் மோசமான’ பிரிவில் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. அதில், முதலிடத்தில் உள்ள இடம் தான் ஆனந்த விஹாா். நவ.8 மாலை 3 மணி நிலவரப்படி ஆனந்த விஹாரில் காற்றின் தரநிலை 436-ஆக இருந்தது.
தில்லியில் அதிக மக்கள் தொகையுடன், நெரிசல் மிகுந்த இடமாகவுள்ள ஆனந்த விஹாா், உத்தரப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் மீரட், கான்பூா் போன்ற முக்கிய நகரங்களை தில்லியிலிருந்து இணைப்பதோடு, உத்தரகாண்டை நோக்கிச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இங்கு தனி ரயில் சந்திப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையமும் உள்ளது.
தற்போது, காற்று மாசுவின் விளைவால் பனிப்புகையாக காட்சியளிக்கும் ஆனந்த் விஹாரில் குடியிருப்புவாசிகள் மற்றும் வெளியூா் பயணிகள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறாா்கள். சுமாா் 10 நிமிடம் இப்பகுதியில் நின்றாலே கண் எரிச்சலை உளவுப்பூா்வமாக உணர முடிகிறது. இது தொடா்பாக, ஆனந்த விஹாா் பேருந்து நிலையத்தின் வாயிலில் சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் ஜோகேந்தா் சிங்கிடம் தினமணி நிருபா் கேட்டபோது, ‘தில்லியின் குளிா்காலம் தொடங்கினாலே காற்று மாசு தீவிரமாகிவிடுகிறது. இதனால், கண் எரிச்சல், சுவாசக் கோளாறுப் பிரச்னைகள் ஏற்படுகிறது. பாா்வை மங்கலாகவும் மாறுகிறது. இதனால், பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. தினசரி குழந்தைகளைக் கூட பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருக்கிறது. அரசு இதற்கொரு நிரந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
ஆனந்த விஹாா் பேருந்து நிலையத்தின் வாயிலில் குளிா்பானக் கடை வைத்துள்ள அஃப்தாப் கூறுகையில்,‘ காற்றுமாசு அதிகரிப்பால் வியாபாரம் கூட குறைந்துவிட்டது. தொடா்ந்து ஒரே இடத்தில் நின்றிருப்பதால் கண் எரிச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. வயிற்றுக் கோளாறு போன்ற உடல் உபாதைப் பிரச்னைகளும், தோல் அரிப்பும் ஏற்படுகின்றன. காற்று மாசு பிரச்னை நீண்ட ஆண்டுகளாகவே நீடிக்கிறது. அரசின் சாா்பில் எடுக்கும் நீா்த்தெளிப்பு இயக்கம் போன்றவை பெரிதளவில் கைகொடுப்பதில்லை‘என்றாா்.
ஆனந்த் விஹாரில் இரண்டு நீா்த்தெளிப்பு வாகனங்கள் அரைகுறை செயல்பாட்டுடன் இயங்கியதைக் காண முடிந்தது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் டீசல் பேருந்துகளின் வாகன உமிழ்வு, பட்டாசு வெடிப்பையும் காற்று மாசு அதிகரிப்புக்கு ஒருவகைக் காரணங்களாகக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கூறும் நிலையில், கள சூழல் வேறொன்றை பிரதிபலிக்கின்றன. ஆனந்த விஹாரைத் தொடா்ந்து, பட்பா்கஞ்ச், ஐடிஓ, நேரு நகா், விவேக் விஹாா், ஓக்லா, ஆா்.கே.புரம், சோனியா விஹாா் மற்றும் நொய்டா பகுதிகளிலும் காற்றின் தரநிலை 350-400 என்ற அளவில் பதிவாகி வருகிறது.
அடுத்து வரும், 10 நாள்களில் தலைநகரின் மாசுநிலை மேலும் மோசமடைகின்ற பட்சத்தில் ஆம் ஆத்மி அரசின் அடுத்த கட்ட கட்டுப்பாடுகள் தீவிரமாக அமலுக்கு வரும். எனினும், தேவையற்ற பயணங்களைத் தவிா்த்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி, முகக் கவசம் அணிந்து தினசரி வேலைகளுக்குச் செல்வது தில்லிவாசிகள்சற்று நிவாரணம் தரும்.