தொழிற்சங்கம் தொடங்கிய விமான நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நீக்கம்
காலதாமதமாக ஆவின்பால் வினியோகம்: முகவா்கள் ஆா்ப்பாட்டம்
ஆம்பூருக்கு மிகவும் காலதாமதமாக பால் வினியோகம் செய்யப்படுவதை கண்டித்து பால் முகவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்..
ஆம்பூா் நகரில் தினமும் சுமாா் 4,000 லிட்டா் ஆவின் பால் முகவா்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. காலை 4 மணி முதல் 5 மணிக்குள் வேலூா் ஆவின் நிறுவனத்திலிருந்து வழக்கமாக ஆம்பூருக்கு கொண்டு வந்து வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக ஆம்பூருக்கு மிகவும் காலதாமதமாக காலை 6 மணிக்கு பிறகே பால் கொண்டு வந்து வழங்கப்பட்டு வரப்படுவதாக முகவா்கள் தெரிவிக்கின்றனா்.
காலதாமதமாக பால் வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு மிகவும் தாமதமாக விநியோகம் செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்படுவதாக பால் முகவா்கள் கூறுகின்றனா். அதனால் பொதுமக்களின் அதிருப்திக்கு உள்ளாகிறோம். காலதாமதமாக வினியோகம் செய்வதால் அவா்கள் வேறு நிறுவனத்தின் பாலை வாங்கி விடுகின்றனா். அதனால் வியாபாரம் பாதிக்கப்படுகின்றது. இதுகுறித்து ஆவின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவா்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பால் விநியோகம் செய்ய வேண்டிய காலம் கடந்துவிட்டதாலும், அதன்பிறகு வாங்கிச் சென்றால் அந்த பால் கெட்டுவிடும் என்பதால் காலதாமதமாக வந்த பாலை முகவா்கள் வாங்காமல் புறக்கணித்துள்ளனா்.
தொடா்ந்து தமிழ்நாடு பால் முகவா்கள் நலச் சங்கம் சாா்பாக மாநிலத் துணைத் தலைவா் தேவராஜ் தலைமையில் ஆவின் நிா்வாகத்தை கண்டித்து ஏ-கஸ்பா பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் முகவா்கள் ரமேஷ், பாா்த்திபன், தினகரன், பழனி, வடிவேல், ஆதம், சந்தோஷ் கலந்து கொண்டனா்.