இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ்: உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டா் ஜ...
``காலாவதி பதவியும், விலகல் கடிதமும்'' -வேலூரில் பாஜக மோதல்... பின்னணி என்ன?
பா.ஜ.க-வில், வேலூர் மாவட்டத்திற்கான புதிய தலைவராக தசரதன் என்பவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கான அறிவிப்பை மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி நேற்று மாலை வெளியிட்டார். இதனிடையே, தசரதன் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிவிப்பு வெளியாகும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மாவட்ட முக்கிய நிர்வாகிகள் 5 பேர் தங்களின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். மூன்று ஆண்டுகளாக மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்துவந்த மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர்களாக இருந்த எஸ்.எல்.பாபு, ஜெகநாதன், மகேஷ்குமார், மாவட்ட பொருளாளராக இருந்த தீபக் ஆகியோர்தான் `விலகல்’ கடிதத்தை மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இவர்களின் கடிதத்தில், ``தற்போது, புதிய மாவட்டத் தலைவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள நபர் நம் கட்சிக்கே விரோதமாக செயல்பட்டுவந்தவர். கட்சியின் வளர்ச்சிக்கும், கட்சிக்காக உழைத்த தொண்டர்களின் எண்ணத்திற்கும் எதிரான இந்த நியமனத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, மிகுந்த மனவருத்தத்துடன் எங்கள் பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்கிறோம்’’ எனக் கூறியிருந்தனர்.
விலகல் கடிதம் ஏன்?
`விலகல் கடிதம்’ குறித்து, வேலூர் மாவட்ட பொதுச்செயலாளராக இருந்த ஜெகநாதனிடம் கேட்டபோது, ``மாவட்டத் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்தான். தசரதன் 2016 முதல் 2022-ம் ஆண்டு வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகாலமாக, ஏற்கெனவே இரண்டுமுறை மாவட்டத் தலைவர் பதவியில் இருந்திருக்கிறார். இவரால் கட்சி வளர்ச்சியடைவில்லை. தசரதன் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. கொஞ்சம் நஞ்சம் கிடையாது. மாநிலத் தலைமைக்கே அது தெரியும்.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கட்சிப் பொறுப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்தான் இந்த தசரதன். இனிமேலும் வியாபாரம்தான் நடக்கப் போகிறது. புதியத் தலைவராக நியமிக்கப்பட்டவரை உடனே மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துதான் நாங்கள் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியிருக்கிறோம்.
மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பதிலுக்காகவும், முடிவுக்காகவும் காத்திருக்கிறோம். நாங்கள் கட்சியில் இருந்து முழுவதுமாக விலகவில்லை. நாங்கள் வகித்துவந்த பதவிகளில் இருந்துதான் விலகிக்கொள்வதாக கடிதம் அனுப்பியிருக்கிறோம். என்றும் தேசப்பணியில் ஈடுபடுவோம்’’ என்றார்.
`ஆதாரமற்ற குற்றச்சாட்டு' -தசரதன்
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, வேலூர் மாவட்ட பா.ஜ.க-வின் புதிய தலைவர் தசரதனிடமே விளக்கம் கேட்டோம். ``என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே ஆதாரமற்றவை. விலகல் கடிதம் அனுப்பிய 5 பேரில், பொதுச்செயலாளராக இருந்த ஒருவர் எனக்கு இப்போது `வாழ்த்து’ சொல்லிவிட்டார்.
முன்னாள் மாவட்டத் தலைவர் மனோகரனையும் நேற்று இரவு 8 மணிக்கு அவரின் வீட்டிலேயே சந்தித்துப் பேசிவிட்டேன். அப்போது, `உங்கள் மீது எந்த விதமான மனவருத்தமும் இல்லை. உங்களிடம் இருந்துதான் நான் நிறைய அரசியல் கற்றுக்கொண்டிருக்கிறேன்’ என மனோகரனே என்னிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மனோகரனின் மனைவி, வேலூர் மாநகராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். அவரை நான்தான் கவுன்சிலராக நிற்கவைத்து போராடி ஜெயிக்க வைத்தேன். நானும் என் பதவி ஏற்பு விழாவிற்கு மனோகரனையும், அவரின் மனைவியும் அழைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.
பொதுச்செயலாளர்களில் ஒருவரான `எஸ்.எல்.பாபு என்பவருக்கு மாவட்டத் தலைவர் பதவி கிடைக்கவில்லை’ என்கிற அதிருப்தி காரணமாக, இப்படியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு, கட்சியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து மண்டலத் தலைவர்களும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் என் வீட்டுக்கு வந்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
காலாவதியாகிவிட்டது...
1980 முதல் 1990 வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பொறுப்பாளராக இருந்தேன். 1991-ல்தான் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன். 1994-ல் காட்பாடி ஒன்றியத் தலைவராக எனக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைச் சிறப்பாக செய்ததால், 2001-ம் ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கான அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதன் பிறகு, 2006-ல் இருந்து 2015 வரை சென்னை நகரச் செயலாளராகவும் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டேன். தொடர்ந்து, 15 ஆண்டுகாலமாக கட்சியின் முழுநேர ஊழியனாக தொண்டாற்றி வந்திருக்கிறேன்.
இதன் காரணமாகத்தான் 2016-ல் மாநிலத் தலைமையே என்னை அழைத்து `வேலூர் மாவட்டத் தலைவர்’ பதவியை எனக்கு வழங்கியது. 2022 வரை மாவட்டத் தலைவராக நீடித்தேன். முதன் முறையாக தாமரையை வேலூரில் மலரச் செய்தேன். ஒரு மாநகராட்சி கவுன்சிலர், மாவட்டத்தில் 2 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 36 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறேன். எனவே, என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனத் தலைமைக்குத் தெரியும். நேற்று மாலையே புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். விலகல் கடிதம் அனுப்பிய நபர்களின் பதவிகள் ஆட்டோமேட்டிக்காக காலாவதியாகிவிட்டது. எனவே, விலகல் கடிதம் அனுப்பியவர்கள் `முன்னாள்’ பொறுப்பாளர்களாக மாறிவிட்டார்கள்’’ என்றார்.