கால்பந்துக்கு டென்னிஸ் மரியாதை: 148 ஆண்டுகால விதியை மாற்றியதா விம்பிள்டன்?
லிவர்பூல் கிளப் கால்பந்து அணியின் வீரர் தியாகோ ஜோடா உயிரிழந்த சம்பவத்திற்காக அந்நாட்டு வீரருக்கு கறுப்புப் பட்டை அணிய தனது 148 ஆண்டுகால விதியை விம்பிள்டன் மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த தியாகோ ஜோடாவும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் லம்போகினி என்ற காரில் ஒன்றாக பயணிக்கும்போது ஸ்பெயினில் ஜமோரா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டு இருவருமே உயிரிழந்தார்கள்.

10 நாள்களுக்கு முன்புதான் தியாகோ ஜோடாவுக்கு தனது சிறுவயது தோழியுடன் திருமணம் நடந்திருந்தது. இந்த விபத்து கால்பந்து உலகில் மட்டுமல்லாமல் விளையாட்டு உலகிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் தியாகோ ஜோடா இடம்பெற்றிருந்தார். லிவர்பூல் அணியில் 2020இல் சேர்ந்த இவர் 65 கோல்கள் அடித்திருக்கிறார். பிரிமீயர் வெல்லவும் துணையாக இருந்துள்ளார்.
விம்பிள்டன் விதியில் மாற்றம்?
பலரும் இவருக்கு இரங்களை தெரிவித்துவரும் நிலையில், விம்பிள்டன் நிர்வாகம் இவரை கௌரவிக்கும் பொருட்டு 148 ஆண்டுகால விதியை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டென்னிஸ் வீரர்கள் தங்களது வெள்ளை உடையில் கறுப்பு நிற பட்டை அணிந்து விளையாட விம்பிள்டன் அனுமதி அளித்துள்ளதாக ஆங்கில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் பிரான்சிஸ்கோ காப்ரல், விம்பிள்டனில் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார்.
முதல்சுற்றில் 7-6, 6-3 என இவரது இணை வென்ற நிலையில், போட்டிக்குப் பிறகு உயிரிழந்த தியாகோ ஜோடா குறித்து மிகவும் உருக்கமாக பேசினார்.
கால்பந்துக்கு டென்னிஸ் மரியாதை அள்ளிகுமா?
இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பெரிதாக பழக்கமில்லை எனினும் அவரை தெரியும் என்றும் அவரைப் பார்த்து பெரிதும் ஊக்கமுற்றதாகக் கூறியுள்ளார்.
ஜோடாவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக காப்ரல் கறுப்புப் பட்டை அணிந்து விளையாட விம்பிள்டன் சிறப்பு அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், விம்பிள்டன் இதுவரை இது குறித்து எதுவும் கூறவில்லை.
”இந்தப் போட்டியில் எனக்கு கறுப்புப் பட்டை அணிய நேரம் கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் அணிய வேண்டும்” என காப்ரல் கூறினார்.
1877 முதல் விம்பிள்டன் போட்டிகளில் வெள்ளை ஆடை உடுத்துவது விதியாக இருக்கிறது. உயிரிழந்த தியாகோ ஜோடாவுக்காக இந்த விதியை தளர்த்திக்கொள்ளுமா எனப் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.