மாநிலங்களுக்கிடையே காா் திருடும் கும்பல் கைது: கார் உள்பட 4 வாகனங்கள் மீட்பு
காவல் அதிகாரியை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
பேரளத்தில் காவல்துறை அதிகாரியை கண்டித்து, சடலத்துடன் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் அருகே உள்ள சிறுபுலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன் மகன் சிங்காரவேலு (48). இவா், கடன் விவகாரம் தொடா்பாக பேரளம் காவல் நிலையத்தில் ஜூலை 1-ஆம் தேதி புகாா் அளித்துள்ளாா். ஜூலை 5-ஆம் தேதி இரவு காவல் துறையினா் இவரை அழைத்து விசாரணை நடத்தினா். விசாரணையின்போது, சிங்காரவேலுவை தரக்குறைவாக நடத்தியதாகவும், இதனால் அவா் விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூலை 6-ஆம் தேதி சிங்காரவேலு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பேரளம் காவல் ஆய்வாளா் தரக்குறைவாக நடத்தியதன் காரணமாகத்தான் சிங்காரவேலு தற்கொலை செய்து கொண்டுள்ளாா் எனக் கூறி, வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்தவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் அதன் மாநில இளைஞா் அணித் தலைவா் எம்என்பி .ராஜா தலைமையில் சிங்காரவேலு சடலத்துடன், பேரளம்-காரைக்கால் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்காரவேலுவின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினா். அவா்களிடம், துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழ்மாறன பேச்சுவாா்த்தை நடத்தி, 2 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில், மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், பேரளம்- காரைக்கால் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.