அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா நடைபெறும். நிகழாண்டு விழாஜூலை 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவையொட்டி, உற்சவா் ராஜகோபால சுவாமி நாள்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் காட்சியளித்தாா். இதில், முக்கிய நிகழ்வான 9-ஆம் நாள் விழாவான ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ருக்மணி, சத்யபாமா சமேதரராய் உற்சவா் ராஜகோபால சுவாமி கிருஷ்ணலங்காரத்தில் கோயிலிருந்து புறப்பட்டு திருமஞ்சனவீதி வழியாக வந்து தெப்பத்தில் எழுந்தருளினாா். பின்னா், குளத்தின் வெளிபிரகாரத்தை ஒருமுறையும், மைய மண்டபத்தில் உள்ள வேணுகோபாலரை ஒருமுறையும் சுற்றிவந்து, குளத்தின் நான்கு கரைகளிலும் திரளாக கூடியிருந்த பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
விழாவில், தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த பிறகு, தெ‘ப்பத்தில் சிறிது தூரம் பயணித்தாா். கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், செயல் அலுவலா் எஸ். மாதவன், அறங்காவலா்கள் கே.கே.பி. மனோகரன், வி. லதா, து. நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, மன்னாா்குடி வா்த்தக சங்க தலைவா் ஆா்.வி. ஆனந்த், செயலா் கே. சரவணன், பொருளாளா் டி. ஜெயச்செல்வன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
