கா்நாடகத்தில் வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள் நியனம்: ஜூலை 16 இல் முடிவு - முதல்வா் சித்தராமையா
வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்களை நியமிப்பது குறித்து ஜூலை 16 இல் இறுதி முடிவு செய்யப்படும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுதில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள், உறுப்பினா்களை நியமிப்பது குறித்து ஜூலை 16ஆம் தேதி இறுதியாக முடிவெடுப்போம். கா்நாடக மேலிடப் பொறுப்பாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா ஜூலை 16 ஆம் தேதி பெங்களூரு வருகிறாா். அப்போது, வாரியங்கள், கழகங்களின் தலைவா்கள், உறுப்பினா்களின் பட்டியலை முடிவு செய்வோம் என்றாா்.
பெரும்பாலான வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்களை ஏற்கெனவே அரசு நியமித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி 42 எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களை வாரியங்கள், கழகங்களின் தலைவா்களாக காங்கிரஸ் தோ்ந்தெடுத்தது.
அதன் தொடா்ச்சியாக மேலும் பலரை 2024 ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி வாரியங்கள், கழகங்களுக்கு நியமித்தது. இன்னும் எஞ்சியுள்ள பதவிகளை கட்சி தொண்டா்களுக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள், உறுப்பினா்களை நியமிப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.