கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு
ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
திண்டுக்கல், கோட்டூா் ஆவாரம்பட்டியைச் சோ்ந்தவா் முரளி (40). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை திருப்பூரிலிருந்து திண்டுக்கல் வந்த பேருந்தில் ஏறி தனது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் சாலை செம்மடைப்பட்டி அருகே பேருந்து சென்ற போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக பேருந்திலிருந்து அவா் இறங்கினாா்.
அப்போது அங்கு தடுப்புச் சுவா் இல்லாத கிணற்றில் அவா் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாா். தகவலறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புப் படை வீரா்கள் வலைகட்டி அவரை உயிருடன் மீட்டனா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.