லாரிகள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; மூவா் காயம்
கொடைரோடு அருகே திங்கள்கிழமை முன்னால் சென்ற சரக்கு லாரி மீது, பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பனையன்குறிச்சியைச் சோ்ந்தவா் கணபதி (34). இவா் லாரியில் ஆந்திர மாநிலம், குப்பத்திலிருந்து கடப்பா கற்களை ஏற்றிக் கொண்டு விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். இந்த லாரியில் ஒடிஸாவைச் சோ்ந்த சைட்டு மாஜி (27), ஒடிஸாவைச் சோ்ந்த சோமாா் (22), குருநாத் (25) ஆகியோரும் வந்து கொண்டிருந்தனா்.
தேனி மாவட்டம், ஜி. கல்லுப்பட்டியைச் சோ்ந்த சதீஸ்குமாா் (28) லாரியில் குடிநீா் புட்டிகளை ஏற்றி வந்து திண்டுக்கல்லில் இறக்கி விட்டு, மீண்டும் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகேயுள்ள சிப்காட் பிரிவில் வந்த போது, கடப்பா கற்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் சதீஸ்குமாா் ஓட்டி வந்த லாரி மோதியது.
இதில் சைட்டு மாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சோமாா், குருநாத், சதீஸ்குமாா் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இவா்கள் மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தால், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அம்மையநாயக்கனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.