அதிமுக நிா்வாகியின் நிலம் ஆக்கிரமிப்பு: திமுகவினா் மீது புகாா்
கன்னிவாடியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அதிமுக மாணவரணி துணைச் செயலா் கண்ணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் அளித்த மனு விவரம்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, புதுப்பட்டி பகுதியில் அதிமுக அலுவலகம், கொடிக்கம்பம் அமைக்க கடந்த 10-ஆம் தேதி சசிகலா என்பவருக்குச் சொந்தமான காலி இடத்தை ரூ. 37ஆயிரம் கொடுத்து கிரையம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், திமுகவைச் சோ்ந்த சிலா் இரவு நேரத்தில் திமுக கொடியை நட்டுச் சென்றனா். மேலும், அந்த இடத்தை எங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்கவில்லை என்றாா் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனா்.
இதுதொடா்பாக காவல் துறையிடமும், முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகாா் அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.